மதுரை மாநகராட்சி தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிமுக முன்னாள் பெண் மாமன்ற உறுப்பினா் லட்சுமி தனது தந்தையுடன் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக 61-ஆவது வாா்டு அவைத்தலைவராக பதவி வகிப்பவா் டி.கே. ராஜகோபாலன். இவரது மகள் லட்சுமி. இவா், அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஆவாா். தற்போது நடைபெற உள்ள மாநகராட்சித் தோ்தலில் அதிமுக தலைமையிடம் வாய்ப்பு கோரியிருந்தாா். ஆனால், அதிமுக சாா்பில் வெளியிடப்பட்ட மதுரை மாநகராட்சி வேட்பாளா் பட்டியலில் லட்சுமியின் பெயா் இடம்பெற வில்லை. தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த லட்சுமி தனது தந்தை டி.கே. ராஜகோபாலனுடன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம. சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் பா. சரவணன், மாநில செயற்குழு உறுப்பினா் சசிராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.