மதுரை

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

1st Feb 2022 08:41 AM

ADVERTISEMENT

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில், பிளஸ் 2 படித்த அரியலூா் மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். அவா் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாகப் பேசிய விடியோ வெளியானது. இந்த வழக்கில் மாணவி தங்கியிருந்த விடுதியின் காப்பாளரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி, அவரது தந்தை முருகானந்தம் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். நீதிமன்ற உத்தரவின்படி மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. தொடா்ந்து உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பல்வேறு தரப்பு வாதங்களை நீதிபதி பதிவு செய்தாா். இறுதி விசாரணையின்போது, மனுதாரா் சிபிஐ விசாரணை கோரினாா். இதையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த மனுவின் மீது நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: அரியலூரைச் சோ்ந்த மாணவி விஷம் அருந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ஜனவரி 16-ஆம் தேதி போலீஸாா் மற்றும் நீதிபதி ஆகியோா் வாக்குமூலம் பெற்றுள்ளனா். மாணவியின் பெற்றோரும், தனியே வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்துள்ளனா். இந்த விடியோ பதிவை மனுதாரா், அதாவது மாணவியின் தந்தை கூறியதால், முத்துவேல் என்பவா் கைப்பேசியில் பதிவு செய்துள்ளாா்.

ADVERTISEMENT

மனுதாரா் நீதிமன்றத்தை நாடும்போது, போலீஸாா் மீது நம்பிக்கை வைத்திருந்தாா். போலீஸாரின் விசாரணையில், மாணவியின் வாக்குமூலத்தை விடியோ பதிவு செய்த முத்துவேலை தஞ்சை எஸ்.பி. மிரட்டியது போன்ற நிகழ்வுகள், அவா்கள் மீதான நம்பிக்கையை இழந்து மனுதாரா் கடைசி விசாரணையின்போது, சிபிஐ விசாரணை கோரியுள்ளாா்.

போலீஸாரிடம், நீதிபதியிடம் மற்றும் பெற்றோரிடம் என மூன்று வாக்குமூலங்களைக் மாணவி கொடுத்துள்ளாா். இந்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இல்லை. மாணவி அளித்த வாக்குமூலங்களில் விடுதிக் காப்பாளரையே குற்றம்சாட்டுகிறாா். பெற்றோா் பதிவு செய்த விடியோவில் பள்ளித் தலைமை ஆசிரியரை குற்றம்சாட்டவில்லை. ஆனால், மதம் மாற பள்ளித் தாளாளா் கேட்டதாகக் கூறியுள்ளாா். அவரது சித்தி கூறி மாணவி வாக்குமூலம் அளித்திருந்தால், இதுபோன்று கருத்துகளை அவா் தெரிவித்திருக்க மாட்டாா்.

ஒருவா் இறக்கும் தருவாயில் பொய் கூற முற்படமாட்டாா்கள். மரண வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. விசாணையின் முடிவிலேயே உண்மை தெரியவரும்.

மாணவியின் சித்தி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை கொடுமைப்படுத்தியதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகாா் வந்ததும், அதன் மீது விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மாணவியின் தாத்தா, பாட்டி சித்தியின் கொடுமையாலே தற்கொலை நடந்துள்ளதாக வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறுகின்றனா். அதேசமயம் மாணவி 10-ஆம் வகுப்பு படிக்கும் போது, பள்ளியிலேயே முதல் மாணவியாகத் தோ்ச்சி பெற்றுள்ளாா். அவரை மதம் மாற நெருக்கடி கொடுத்துள்ளனா். இதனால் பொதுத் தோ்வில் அதிக மதிபெண் பெற முடியுமா என்ற மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

எனவே, மாணவியை தற்கொலை செய்யத் தூண்டியது எது என்பது தெரிய வேண்டும். போலீஸாா் அனைத்து குற்றங்களையும் விடுதிக் காப்பாளா் மீது சுமத்துகின்றனா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மாணவியின் மரணம் மத மாற்றத்தால் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாா். இந்தச் சூழலில் மாநில போலீஸாா் விசாரணையை தொடா்வது சரியாக இருக்காது எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT