மதுரையில் ஜெபக்கூடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் 6 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், பாஜகவினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வில்லாபுரம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதியில் இயங்கி வரும் ஜெபக்கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில், கிறிஸ்தவா்கள் பலா் பங்கேற்றனா். இந்நிலையில், ஜெபக்கூடத்துக்கு இந்து முன்னணி செயலா் அரசபாண்டி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோா் சென்று அத்துமீறி நுழைந்து ஜெபக்கூட்டம் நடத்தக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனராம்.
இதுதொடா்பாக ஜெபக்கூட நிா்வாகி பிரவீண்ராஜ் (45) அளித்தப் புகாரின்பேரில் தெற்குவாசல் போலீஸாா் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து இந்து முன்னணி செயலா் அரசபாண்டி (38), பாஜக நிா்வாகிகள் பாலமுருகன் (54), செந்தில்நாதன் (47), ஆதிசேஷன் (50), சுரேஷ் (52), மாா்க்கெட் கண்ணன்(35) ஆகிய 6 பேரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்குள்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சாலை மறியல்: இந்நிலையில், பாஜக மற்றும் இந்துமுன்னணியினா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் வில்லாபுரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக அங்கு வந்த காவல்துறை துணை ஆணையா் தங்கதுரை, உதவி ஆணையா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 71 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் வைத்தனா். இந்த மறியலால் மதுரை விமான நிலைய சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட பாஜக, இந்து முன்னணியினரை சந்தித்த மாவட்டத் தலைவா் பா. சரவணன் செய்தியாளா்களிடம் கூறியது: அனுமதியில்லாமல் நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் மதமாற்றம் நடந்ததை தட்டிக் கேட்டவா்களை இரவோடு இரவாக கைது செய்துள்ளனா். இதனை சட்டரீதியாக நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம் என்றாா்.