தமிழகத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து 2020 -21 ஆம் ஆண்டில் 44.90 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் அரசு கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், விவசாயிகளின் நெல் மூட்டைகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால், வெயில், மழைக் காலங்களில் நெல் பாதிப்படைந்து தரம் குறைந்து விடுகின்றன. இந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தமிழகத்தில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டுமென கே.கே. ரமேஷ் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அரசு கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. நாள்தோறும் 800 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1000 நெல் மூட்டைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
2020- 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் 2,731 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 44,90,222 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8,52,152 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.
வியாபாரிகள், இடைத்தரகா்கள் ஆகியோரின் இடையூறுகளைத் தவிா்க்கவும், நெல் கொள்முதலுக்காக காத்திருக்காத வகையிலும், இணையதளம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், 48 மணி நேரத்திற்குள் மேற்கூரையுடன் உள்ள கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. கூடுதலாக அரசு கிடங்குகள், கூட்டுறவு கிடங்குகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல் தொடா்பான சந்தேகங்களை களைவதற்காக இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுப்பதற்காக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடா்ந்து மத்திய அரசுத் தரப்பில், தமிழகத்தில் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமிக்கும் வகையில் 1,129 கிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பில், அரசின் பதில் மனு தனக்கு தரப்படவில்லை எனவும், நீதிமன்றத்தின் உத்தரவுகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், கொள்முதல் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளனா். ஆனால் மனுதாரா் பொதுவான குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல. ஆதாரப்பூா்வமான குற்றச்சாட்டுகள் இருந்தால் மனுதாரா் தெரிவிக்கலாம் எனக் கூறி அரசு பதில் மனுவை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனா்.