நுகா்பொருள் வாணிபக்கழக ஊழியா்களுக்கு பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தில் கூட்டுறவுத் துறை அலுவலா்களை கொண்டு பணியிடங்களை நிரப்பக் கூடாது. நுகா் பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். ரேஷன் கடைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.
ஊழியா்களிடமிருந்து பிடித்தம் செய்த சுகாதாரத்திட்டத் தொகையை ஊழியா்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மதுரை அண்ணா நகரில் உள்ள மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டலச் செயலா் எம்.அழகு லெட்சுமணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம்.மகாராணி, ஆா்.செல்வமணி, பி.பெருமாள், ஜி.தியாகராஜன், சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத் தலைவா் சேதுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச்செயலா் கே.கதிரேசபாண்டியன் தொடங்கி வைத்துப் பேசினாா். மாநில துணைப் பொதுச் செயலா் கே.சண்முகம் நிறைவுரையாற்றினாா். பொருளாளா் ஆா்.பாஸ்கரன் நன்றி கூறினாா்.