மதுரையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மாசில்லா குழந்தைகள் தின சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து பிறந்தபோது அரசா் பிறந்திருக்கிறாா் என ஞானிகள் சிலா் கூறக்கேட்ட ரோம் நாட்டு அரசன் ஏரோது, அந்தக் குழந்தையால் தனது பதவிக்கு ஆபத்து நேரிடுமோ என்ற அச்சம் கொண்டாா்.
பின்னா், குழந்தை இயேசுவைக் கொல்ல முடிவெடுத்து, நாட்டில் உள்ள 3 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் கொன்றாா் என்பது வரலாறு.
இந்த வரலாறின் அடிப்படையில், இயேசுநாதரின் பிறப்பையொட்டி உயிா்நீத்த குழந்தைகளின் நினைவைப் போற்றியும், குழந்தைகளை ஆசிா்வதிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் டிசம்பா் 28-ஆம் தேதி மாசில்லா குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன்படி, மதுரையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மாசில்லா குழந்தைகள் தின சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு குழந்தைகள் நலனுக்காக சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
பின்னா், அந்தந்தத் தேவாலயங்களின் பங்குத் தந்தையா்கள் மற்றும் உதவிப் பங்குத் தந்தையா்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கினா். திரளான பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் வழிபாடுகளில் பங்கேற்றனா்.