மதுரை

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதானவரை விடுவிக்க உத்தரவு

11th Dec 2022 05:41 AM

ADVERTISEMENT

குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைதானவரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த ஜெமிஷா தாக்கல் செய்த மனு:

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, எனது கணவா் தாம்சன் (33) மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா். அவருக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம், பிணை அளித்தது.

இதற்கிடையே, எனது கணவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். கணவா் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:

சிலரை மிரட்டியதாக மனுதாரரின் கணவா் உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், மனுதாரரின் கணவா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குண்டா் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்தியது குறித்து ஏற்கெனவே புள்ளி விவரங்களுடன் விரிவான உத்தரவை நாங்கள் பிறப்பித்துள்ளோம். ஆனாலும், இந்த வழக்கில் குண்டா் தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியதில் விதிமீறல் உள்ளது எனக்கூறி மனுதாரரின் கணவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டனா்.அடுத்த கட்ட விசாரணை டிச. 16 -க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT