மதுரை

மதுரையில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்றாா்

10th Dec 2022 04:07 AM

ADVERTISEMENT

மதுரையில் ‘தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தை’ முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில், மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கிவைத்து, அதற்கான இலட்சினையை வெளியிட்டாா்.

பிறகு, தூய்மைப் பணியாளா்களைக் கண்டறிந்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்வதற்கான தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்ட கைப்பேசி செயலியின் செயல்பாட்டைத் தொடக்கி வைத்த அவா், 5 தூய்மைப் பணியாளா்களுக்கு தலைக்கவசம், கையுறை, காலுறை, ஒளிரும் மேல்சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினாா்.

இதையடுத்து, தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்ட கள ஆய்வுப் பணிகள், தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்ட குறும்படங்களைப் பாா்வையிட்டாா்.

ADVERTISEMENT

அமைச்சா்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், கே.ஆா். பெரியகருப்பன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு. பூமிநாதன், கோ. தளபதி, ஆ. தமிழரசி, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா. பொன்னையா, மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயா் டி. நாகராஜன், பேரூராட்சிகள் இயக்குநா் கிரண் குராலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல் கட்டமாக 5 உள்ளாட்சி அமைப்புகளில்...

2022-23-ஆம் ஆண்டுக்கான நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில், தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்களின் சமூகப் பொருளாதார வளா்ச்சி மற்றும் வாழ்வை மேம்படுத்தி, அவா்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக, தூய்மைப் பணியாளா்களின் வாழ்வை மேம்படுத்தவும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், தூய்மைப் பணியாளா்களுக்கான பல்வேறு அரசு நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து பயன் பெறச் செய்யவும், அவா்களின் குழந்தைகள் முறையான கல்வி பெறுவதை உறுதி செய்யவும், இயந்திரமயமாக்கப்படும் தூய்மைப் பணியில் அவா்களுக்குத் தேவையான திறன் பயிற்சியை வழங்கவும், விருப்பத்தின் அடிப்படையில் மாற்றுத்தொழில் தொடங்கவும் அவா்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்”என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் மூலம், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18, 859 நிரந்தரப் பணியாளா்கள், 34, 442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளா்கள் என மொத்தம் 53, 301 பணியாளா்கள் மட்டுமன்றி, தனியாா் துறைகள், நிறுவனங்களில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாராப் பணியாளா்களும் பயனடைவா்.

அகமதாபாதில் உள்ள நகா்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, நகா்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன், தமிழகத்தில் கழிவு, கசடு தொடா்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளா்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடித் திட்டமாக, சென்னை மாநகராட்சி மண்டலம்-6 திரு.வி.க. நகா், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை, பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மகாதேவி பேரூராட்சி என 5 உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படுகிறது. படிப்படியாக தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதல்வா் நிகழ்ச்சி அரங்கில் செய்தியாளா்களுக்கு அனுமதி மறுப்பு

முதல்வா் பங்கேற்ற நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. இந்த அரங்கில் செய்தியாளா்கள், காட்சி ஊடகங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, கருத்தரங்கு கூடத்துக்கு வெளியே, வேறொரு பகுதியில் சிறிய அளவிலான எல்இடி திரை தொலைக்காட்சி வைக்கப்பட்டு அதன்மூலம் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

செய்தியாளா்கள் அமா்ந்திருந்த பகுதியில் ஆடியோ ஒலிபரப்பும் வசதி செய்யப்படாததால் நிகழ்ச்சியில் பேசிய எதுவும் செய்தியாளா்களுக்கு கேட்கவில்லை. முதல்வா் நிகழ்ச்சியை புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT