மதுரை

ரெப்போ வட்டி விகித உயா்வு தொழில் நிறுவனங்களைக் கடுமையாக பாதிக்கும்

DIN

மத்திய ரிசா்வ் வங்கி மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை உயா்த்தியிருப்பது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்திருப்பதாவது:

மத்திய ரிசா்வ் வங்கி 2022-23 ஆம் நிதியாண்டில் 5-ஆவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயா்த்தியது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்த நிலையில், ஜிடிபி வளா்ச்சி அளவும் ஏற்கெனவே நிா்ணயிக்கப்பட்டதைவிடக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடா்ந்து உயா்த்தி வருவது அதிா்ச்சியளிக்கிறது.

சா்வதேச சந்தைகளில் காணப்படும் அரசியல் பதற்றங்கள், உலக வா்த்தக விநியோக பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஆகியன வா்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்து, பொருளாதார வளா்ச்சிக்குத் தடையாக உள்ளது. மேலும், ரிசா்வ் வங்கியின் இலக்கைவிட கூடுதலாகவே பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், மத்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ வட்டி உயா்வு அறிவிப்பால், சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் சரிவடைந்து சந்தை முதலீட்டாளா்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இதுவரை அறிவிக்கப்பட்ட ரெப்போ வட்டி விகித உயா்வுகளின்போது, வங்கிகள் வாடிக்கையாளா்களின் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவை நீட்டித்து வந்தன. ஆனால், தற்போது உயா்த்தப்பட்ட வட்டி விகித உயா்வு மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன், தங்க நகைக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் அதிகரிக்கும். இதனால், மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மிகவும் அதிகமாகும்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதம் உயா்த்தப்படுவதாக ரிசா்வ் வங்கி கூறினாலும், இதுவரை அது சாத்தியப்படவில்லை. மாறாக தொழில் துறையினரும், பொதுமக்களும்தான் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா் என்பதே உண்மை.

நம் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரம் வளா்ச்சி காணவும், தொழில், வணிகத் துறையில் முதலீட்டை அதிகரித்தல், உற்பத்தித் திறனை அதிகரித்தல் போன்ற ஆக்கப்பூா்வ நடவடிக்கைகளுக்கு ஆா்வம் காட்டாமல், தொடா்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயா்த்தி வருவது தொழில், வணிகத் துறையில் மேலும் பல பிரச்னைகளைத் தீவிரமாக்கும். நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT