மதுரை

தகுதியான பயனாளிகளுக்கு விடுபாடின்றி நலத் திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும்

9th Dec 2022 01:54 AM

ADVERTISEMENT

தகுதியான பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் விடுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று தமிழக நிதி. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த ஆரப்பாளையம் மந்தைத் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மேலும் அவா் பேசியதாவது :

அரசியல் இயக்கத்துக்குக் கொள்கையும், தத்துவங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில், பொது வாழ்க்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மனிதநேயமும், செயல்திறனும் முக்கிய குண நலன்களாகும். சமூக நீதி என்ற கொள்கையின் அடிப்படையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வா் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறாா்.

இந்த நலத் திட்டங்களின் பயன்கள், தகுதியானோருக்கு விடுபாடின்றி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. எனவே, தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலன் நிச்சயம் மேம்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வருவாய்த் துறை சாா்பில் 190 பேருக்கு முதியோா் உதவித் தொகை உத்தரவு, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் மூலம் 30 பேருக்கு மகளிா் சுய உதவிக் குழுக் கடன்கள் உள்பட 315 பயனாளிகளுக்கு ரூ. 1.97 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

பின்னா், பேச்சியம்மன் படித்துறை மீன் சந்தைப் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், துணை மேயா் நாகராஜன், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா் எஸ். பாண்டிச்செல்வி, அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT