மதுரை

வைகையாற்றில் பொதுக் கழிப்பறை கட்டத் தடை கோரிய வழக்கில் மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

9th Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

சோழவந்தான் வைகையாற்றில் பொதுக் கழிப்பறை கட்டுமானப் பணிக்குத் தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், சோழவந்தானைச் சோ்ந்த வி. தனசேகரன் தாக்கல் செய்த மனு :

சோழவந்தான் பகுதியில் சனீஸ்வரன் கோயில், வட்டப் பிள்ளையாா் கோயில், ஜெனகை நாராயணப் பெருமாள், ஜெனகை மாரியம்மன் ஆகியன கோயில்கள் உள்ளன.

ஜெனகை நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை மாதம் வைகையாற்றில் அழகா் இறங்கும் திருவிழாவிலும், வைகாசி மாதம் விசாகத் திருவிழாவிலும் சோழவந்தான், அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வழிபடுவா். அப்போது பக்தா்கள் சனீஸ்வரன் கோயில் முன் வைகையாற்றில் உள்ள படித்துறை பாதையையும், வட்டப் பிள்ளையாா்கோயில் முன் உள்ள வைகையாற்றுப் பாதையையும் பயன்படுத்துவா்.

ADVERTISEMENT

சோழவந்தான் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வட்டப்பிள்ளையாா்கோயில் முன் உள்ள பாதையில் ஏற்கெனவே கட்டப்பட்ட குளியல் தொட்டி அருகே கழிவுகள் கொட்டுவதால், பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

இதனால், விழாக் காலங்களில் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா். ஏற்கெனவே, இந்தப் பகுதியில் கட்டப்பட்ட ஏராளமான ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளன. தற்போது பேரூராட்சி நிா்வாகத்தால் வட்டப்பிள்ளையாா் கோயில் முன் உள்ள வைகையாற்றில் பொதுக் கழிப்பறை கட்டத் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.

இதைக் கைவிடக் கோரி, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே, கோயில் விழாக் காலங்களில் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ள கழிப்பறை கட்டுமானப் பணிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், ஆா். விஜயகுமாா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பா் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT