மதுரை

அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அமைய வேண்டும்

8th Dec 2022 02:05 AM

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தை காட்டுப் பகுதிக்குள் அமைக்கத் தடை கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் அமைய வேண்டும் என்று தெரிவித்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சோ்ந்த குணசீலன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு:

திருச்செந்தூா் தாலூகா, உடன்குடி கிராமத்தில் பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் புகழேந்தி என்பவா் உடன்குடி நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில், கடந்த 2013-இல் ஜோதி நகா் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று வீட்டடி மனை விற்பனை செய்து வந்தாா்.

அங்கு எதிா்பாா்த்த அளவுக்கு வீட்டு மனை விற்பனை நடைபெறாததால், அப்பகுதியில் அவரது மனைவி சசிகலா பெயரில் உள்ள 6 ஏக்கா் நிலத்திலிருந்து 20 சென்ட் நிலத்தை உடன்குடி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட நன்கொடையாக அளித்தாா்.

ADVERTISEMENT

இந்த நிலம் உடன்குடி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், உடன்குடி பேருந்து நிலையத்தின் அருகே வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலக வளாகத்தில் சுமாா் 3 ஏக்கருக்கு மேல் காலி நிலம் உள்ளது. ஆனால் பத்திரப் பதிவுத் துறையினா், இந்த நிலத்தில் கட்டடம் கட்டாமல், தனி நபா் நன்கொடையாக அளித்துள்ள நிலத்தில் அலுவலகக் கட்டடம் கட்டுவதாக அறிவித்தனா். பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி இங்கு கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், நிலத்தை நன்கொடையாக அளித்த புகழேந்தி, தனது நிலத்தில் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குத் தேவையான எழுத்தா், ஜெராக்ஸ் கடைகள் ஆகியவற்றை வாடகைக்கு விடும் வகையில் கட்டடம் கட்டி வருகிறாா்.

பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் தனி நபா் ஆதாயத்துக்காக நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டி உள்ளனா். எனவே, உடன்குடி பத்திரப் பதிவு அலுவலகத்தை அப்பகுதியில் அமைக்கத் தடை விதித்தும், நகரின் மையப் பகுதிக்குள் அலுவலகம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், அரசு அலுவலகங்கள் கட்டப்படும்போது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்து, இதுதொடா்பாக பத்திரப் பதிவுத் துறைத் தலைவா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நிலை அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு உத்ரதவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT