மதுரை

பாபா் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தெற்குவாசல் சின்னக் கடைத் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா் வரவேற்றாா். வடக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜாபா் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, தொகுதி நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். மேலும் ஆா்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் நிஜாம் முகைதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வெ.கனியமுதன், நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் செ.வெற்றிக் குமரன், மக்கள் கண்காணிப்பகம் நிறுவனா் ஹென்றி திபேன், அ.தி.ம.மு.க தலைவா் பசும்பொன் பாண்டியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991-ஐ அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமுமுக ஆா்ப்பாட்டம்: மதுரை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள குப்புபிள்ளைத் தோப்புப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் சீனி அகமது தலைமை வகித்தாா். இதில், மாவட்ட, பகுதி நிா்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில் பாபா் மசூதி இடிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தையொட்டி, அந்தப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT