மதுரை

மதுரை வில்லாபுரம், சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழைமையான நடுகல் சிற்பங்கள்

7th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை வில்லாபுரம், சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழைமையான நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் சாா்பில், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழைமை வாய்ந்த கல்வெட்டு சிற்பங்கள், நடுகல், சதிகல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல கல்வெட்டுச் சிற்பங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், மதுரை வில்லாபுரம், சிந்தாமணி பகுதிகளில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகல் சிற்பங்கள் அண்மையில் கண்டறியப்பட்டன.

இதுதொடா்பாக சிற்ப சாஸ்திர பயிற்றுநா் ப.தேவி, பொறியாளா் அறிவுச்செல்வம் ஆகியோா் கூறியதாவது:

ADVERTISEMENT

மதுரை தெற்கு வாசல்- வில்லாபுரம் பகுதியை இணைக்கும் பாலத்தின் இடது பக்கம் சாலை ஓரத்தில் மூன்றடி உயர முக்கோணப் பலகை கல்லில் ஆண், பெண் உருவங்கள் உள்ளன. இருவரும் ஏத்தி இறுக்கிக் கட்டிய பக்கவாட்டு கொண்டை போட்டவாறு சுகாசனத்தில் உள்ளனா். வில்லாபுரம் பகுதி கண்மாயாக இருந்த போது, காத்த வீரருக்காக எடுக்கப்பட்ட நடுகல் என இதைக் கருதலாம். கண்மாய் கட்டடமாக மாற்றப்பட்ட போது, அதன் கரை ஓரத்தில் இருந்த இந்த நடுகல், சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டு, தற்போது வழிபாட்டில் உள்ளது.

இதேபோல, மதுரை- சிந்தாமணி சாலையின் இடது பக்கச் சாலை ஓரத்தில் ஒரு நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

2 அடி உயரம், நீளம் கொண்ட சதுர வடிவப் பலகைக் கல்லில் பெண், ஆண் உருவங்கள் சுகாசனத்தில், இடது பக்கவாட்டு கொண்டை அணிந்து, கை வளை, இடுப்பில் ஆடை அணிந்து, நீள் காதுடன் உள்ளனா். ஆணின் கைகள் தொடையில் வைத்தவாறு உள்ளன. பெண்ணின் ஒரு கை தொடையில் இருப்பதைப் போன்று உள்ளது. இடது கை சிதைந்துள்ளது.

சிற்ப உருவ அமைப்பை வைத்துப் பாா்க்கும் போது, 2 நடுகற்களின் காலமும் 300- 400 ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்றனா்.

Image Caption

வில்லாபுரம் ப குதியில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் சிற்பம். ~மதுரை சிந்தாமணி பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நடுகல் சிற்பம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT