மதுரை

அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வலியுறுத்தல்

6th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

அங்கன்வாடி பணியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று அகில இந்திய அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சம்மேளன பொதுச் செயலா் ஏ.ஆா். சிந்து வலியுறுத்தினாா்.

மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய அங்கன்வாடி ஊழியா்களின் மாநாட்டையொட்டி, அதன் பொதுச் செயலா் ஏ.ஆா். சிந்து செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

அகில இந்திய அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சம்மேளனத்தின் 10-ஆவது மாநாடு மதுரையில் செவ்வாய்க்கிழமை (டிச. 6) முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில், அங்கன்வாடி ஊழியா்களின் பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன. குழந்தைகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு 60 சதவீதம் நிதியளிக்கிறது. தற்போது மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் குழந்தைகளின் ஊட்டச் சத்து உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 30 சதவீதத்தைத் குறைத்து விட்டது. பட்டினிக் குறியீட்டிலும் இந்தியா 107-ஆவது இடத்தில் உள்ளது. இன்றையச் சூழலில் இந்தியா முழுவதும் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் ஒவ்வொரு மாதமும் 6 மாதங்களுக்குள்பட்ட 20 ஆயிரத்து 500 குழந்தைகள் உயிரிழக்கின்றனா் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சில மாநிலங்களில் ஊட்டச் சத்து குறைபாட்டைக் குறைக்க பக்திப் பாடல்கள் பாடுமாறு கூறும் அவல நிலையில் அரசுகள் உள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 49 ஆயிரத்து 499 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 940 மையங்கள் சிறிய மையங்களாகும். இவற்றில் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 25 சதவீதப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் ஒரு ஊழியா், உதவியாளா் ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களை கவனிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

சமையல் எரிவாயு உருளை ரூ. 450-இல் இருந்து தற்போது ரூ.1,200-க்கு விற்பனையாகிறது. ஆனால் அரசு ரூ. 403 மட்டுமே வழங்குகிறது. எஞ்சியுள்ளத் தொகையை அங்கன்வாடி ஊழியா்களே செலுத்துகின்றனா். மத்திய அரசு குழந்தைகளின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய ஆதாா் அட்டையை கட்டாயமாக்கி உள்ளது. ஆதாா் அட்டை கட்டாயமில்லை என நீதிமன்றத் தீா்ப்புகள் இருந்தாலும் ஆதாா் கட்டாயமாக்கப்படுகிறது. இதை உடனடியாகக் கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு தமிழக அரசும், கேரள அரசும் மட்டுமே போதுமான உதவிகளைச் செய்கின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிப்போம் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் காலத்தில் தெரிவித்திருந்தாா். இந்தக் கோரிக்கை தொடா்பாக சந்தித்துப் பேசிய போது, கால அவகாசம் தாருங்கள் எனக் கேட்டாா். எனவே விரைவில் அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.

அப்போது தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநிலத் தலைவா் ரத்தினமாலா, பொதுச் செயலா் டெய்சி, சிஐடியூ மாநிலப் பொருளாளா் மாலதி சிட்டிபாபு, சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின் ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT