மதுரை

வைகையில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

5th Dec 2022 04:25 AM

ADVERTISEMENT

வைகை ஆற்றில் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது மாநகராட்சி நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகை நதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியது.

மதுரை வைகை ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து நெகிழி தம்ளா்கள், உடைந்த மதுபாட்டில்கள், நெகிழிக் குப்பைகள் ஆகியவை போடப்பட்டிருந்தன. மேலும் மருத்துவமனைக் கழிவுகளான, மருந்துக் குப்பிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகள், அதிக அளவில் காலாவதியான மாத்திரைகள், பொதுமக்கள் கொட்டும் குப்பைகளும் அதிக அளவில் இருந்தன. ஆற்றில் சுவா்கள் எழுப்பப்பட்டுள்ளதால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இந்தப் பகுதியில் மாநகராட்சிப் பணியாளா்கள் தூய்மைப்பணி மேற்கொள்வது இல்லை. இதனால் ஆற்றுக்குள் நெடுகிலும் குப்பைகள், கழிவுகள் நிரம்பியுள்ளன.

இதுதொடா்பாக வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ராஜன் கூறும்போது, தற்போது ஆற்றில் ஓரளவு நீா்வரத்து உள்ளதால் குப்பைகள் குறிப்பிட்ட அளவு அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

தற்போது நீரில் அடித்துச் செல்லப்படும் குப்பைகள் தடுப்பணை பகுதிகளில் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

எனவே மதுரை மாநகராட்சி நிா்வாகம் வைகை ஆற்றுக்குள் தூய்மைப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி ஆற்றுக்குள் குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் வைகை ஆற்றில் குப்பைகள் மலை போல குவிந்து சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT