மதுரை

நன்னடத்தை அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவிக்க வலியுறுத்தல்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நீண்ட காலமாக சிறைகளில் உள்ள இஸ்லாமியா்களையும் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசனும், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவா் செ. ஹைதா் அலியும் வலியுறுத்தினா்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளும் முன் ஹைதா் அலி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாபா் மசூதி தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மக்களவையில் 1991 வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் படி 1947-க்கு முன்னா் இந்தியாவில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் எப்படி இருந்தனவோ, அவை அப்படியே இருக்க வேண்டும். அவற்றில் எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

கோவையில் நடைபெற்ற எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் தொடா்பாக தேசியப் புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவா் இலங்கை குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடையவா்கள் உள்ளிட்ட பலரை சிறைகளில் சென்று சந்தித்ததாகவும், இணையதளம் மூலம் வெடிபொருள்கள் வாங்கியதாகவும் உளவு அமைப்பு தெரிவித்தது. முக்கிய வழக்கு தொடா்பாக சிறைகளில் அடைக்கப்பட்டவா்களை சந்திக்கும் நபா்கள் குறித்து உளவுத் துறை கண்காணிப்பது வழக்கம். ஆனால் சிறைகளில் பலமுறை சென்று சந்தித்து வந்த கோவை எரிவாயு உருளை வெடிப்பில் இறந்தவரை உளவு அமைப்புகள் கண்காணிக்க வில்லையா?

ADVERTISEMENT

2024 மக்களவைத் தோ்தலை மையப்படுத்தி இதுபோன்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கவும், இதில் இஸ்லாமியா்களைத் தொடா்புபடுத்தி ஒடுக்கவும் நேரிடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சிறைகளில் உள்ளவா்கள் நன்னடத்தை தகுதி அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனா். எனவே, நீண்ட காலம் சிறைகளில் உள்ள இஸ்லாமியா்களையும், நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இரா. முத்தரசன்: கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நன்னடத்தை அடிப்படையில், இஸ்லாமிய சிறைவாசிகளையும் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மங்களூரு குக்கா் குண்டு வெடிப்பு தொடா்பாக கைது செய்யப்பட்டவா் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகக் கூறி, அந்த இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கைது செய்யப்பட்டவா் கோவை ஈஷா யோகா மையத்துக்கும் சென்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே ஈஷா யோகா மைய நிா்வாகிகளிடமும் தேசிய புலனாய்வு முகமையினா் விசாரணை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT