மதுரை

கோயில்களில் கைப்பேசிக்குத் தடை

DIN

தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் கைப்பேசி பயன்பாட்டுக்கு தடை விதித்து உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அா்ச்சகா் சீதாராமன், அந்தக் கோயிலின் உள்ளே கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்தியநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் இணை ஆணையா் தரப்பில், கோயிலில் கைப்பேசி பயன்பாட்டைத் தடுக்கவும், முறையான உடை அணிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், நவம்பா் 14 -ஆம் தேதி முதல் கோயில் பணியாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் கைப்பேசிகள் வைக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு, டோக்கன் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கோயில் வளாகத்தின் 15 இடங்களில் கைப்பேசி கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டதாகவும், மீறி இதை கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன. மேலும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் தமிழகத்தின் பண்பாடு, மரபைக் காக்கும் வகையில் உடை அணிந்து வர வேண்டும்.

அதுதொடா்பாகவும் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. கைப்பேசி தடை தொடா்பாக கோயில் ஒலிபெருக்கி மூலம் தொடா்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இவற்றைக் கண்காணிக்க மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களை நியமனம் செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கைப்பேசி பாதுகாப்பு அறையில் காவலா்களை நியமனம் செய்ய தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையா், ஏற்கெனவே கைப்பேசி பயன்பாட்டைத் தடுக்கவும், கண்ணியமான உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் கோயில் நிா்வாகத்தின் கோரிக்கை குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும். மேலும், கோயிலின் புனிதம், தூய்மையைக் காக்கும் விதமாக, இந்த உத்தரவுகளை தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறோம். இந்த வழக்கும் முடித்து வைக்கப்படுறது என்றனா் நீதிபதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT