மதுரை

உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அமா்வில் 57 நாள்களில் 6,500 வழக்குகள் முடித்துவைப்பு

DIN

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு 57 நாள்களில் 6,500 வழக்குகளை முடித்து வைத்ததோடு, பல்வேறு வழக்குகளில் முக்கியத் தீா்ப்புகளையும் வழங்கியது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீதிமன்ற அமா்வு மாற்றப்படுவது வழக்கம். இதன்படி, கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு பொறுப்பேற்றது. இதைத்தொடா்ந்து, செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் டிசம்பா் 2-ஆம் தேதி வரையிலான 57 நீதிமன்ற வேலை நாள்களில் பொது நல வழக்குகள், மேல் முறையீடு உள்பட 6,500 வழக்குகளை இந்த அமா்வு விசாரித்து முடித்து வைத்துள்ளது. மேலும், பல்வேறு வழக்குகளில் முக்கியத் தீா்ப்புகளையும் அளித்தது.

இதில், தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் கைப்பேசிக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவும் அடங்கும்.

குற்றாலம் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதிகள் உருவாக்க அரசுக்கு ஆணையிட்டது. மயானமாகப் பயன்படுத்திய கோயில் நிலங்களை மீட்கவும், மாணவா்களை கழிப்பறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதேபோல, திருச்சி மலைக்கோட்டை பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானத்துக்கு தடை, அங்கீகாரம் இல்லாத நிலங்களை வீட்டடி மனைகளாக பதிவு செய்வதற்கு எதிரான நடவடிக்கை, மேகமலை வன விலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் சொகுசு விடுதிகள் தொடா்பாக சிபிஐ விசாரணை போன்ற பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

பாா்வையற்றோரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் திருக்குறளை மொழி பெயா்க்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுப் பூங்காக்களைப் பராமரிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வனங்களின் எல்லைகளை நிலஅளவை செய்ய வேண்டும். பல்வேறு கோயில்கள், ஆதீனங்களின் நிலங்களை மீட்க வேண்டும். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மெட்டல் டிடெக்டா், உடைமைகளைப் பரிசோதிக்கும் கருவிகளை நிறுவ வேண்டும்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பகுதியில் உள்ள அங்கீகாரமற்ற கட்டடங்களை அகற்ற வேண்டும். தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சட்டவிரோதமாக தண்ணீரை மடைமாற்றி செயற்கை அருவிகளை உருவாக்கிய தனியாா் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும். கோயில்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி இணையதளங்களை நீக்க வேண்டும். டாஸ்மாக், மதுபானக் கூடங்கள் இயங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் நடமாடும் ஆலோசனை மையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனா்.

இதேபோல, நீா்நிலைகள், அரசு, பொது நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கீகாரமற்ற கட்டடங்கள், குவாரிகளை அகற்றவும் இந்த நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT