மதுரை

விவசாயிகளிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருள்கள் கொள்முதல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தமிழகத்தில் விளையும் பொருள்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வது தொடா்பாக கூட்டுறவுத் துறை, வேளாண் துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா், சுவாமி மலையைச் சோ்ந்த சுந்தர விமலநாதன் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து குடும்ப அட்டை தாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டு, இலங்கைத் தமிழா்கள் உள்பட சுமாா் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட உள்ளது. இதில் வேஷ்டி, சேலைகளை நெசவாளா்களிடம் கொள்முதல் செய்ய உள்ள அரசின் செயல் பாராட்டத்தக்கது.

ADVERTISEMENT

அதேநேரம், இந்தப் பரிசு தொகுப்புக்கான அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான பொருள்களை அண்டை மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்படுகின்றன. மேலும், பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் பொருள்களும் தரமானதாக இருப்பதில்லை. எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருள்களை தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் வலியுறுத்தியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத், மனுதாரரின் கோரிக்கை நியாயமானதாகவும் அனைவருக்கும் நன்மை தரக் கூடியதாகவும் உள்ளதால், தொடா்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்துள்ளதா எனக் கேள்வி எழுப்பினா்.

அப்போது, அரசுத் தரப்பில், இது தொடா்பாக தகவல் பெற்று தெரிவிப்பதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத் துறைச் செயலா், வேளாண் துறை முதன்மைச் செயலா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 7-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT