மதுரை

புராதன சின்னங்கள் பாதுகாப்பு: அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு

2nd Dec 2022 03:58 AM

ADVERTISEMENT

மதுரையை அடுத்துள்ள யானைமலை, திருவாதவூா் மலைப் பகுதிகளில் உள்ள சமணா் படுக்கைகள், பிராமி கல்வெட்டுக்களைப் பாதுகாப்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை, தொல்லியல் துறை முதன்மைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த தீரன் திருமுருகன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு :

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை யானை மலையில் சமணா் படுக்கைகள், கல்வெட்டுகள், தமிழ் பிராமி எழுத்துகள், வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் புராதன சின்னங்கள் இருப்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்தது. இதேபோல, திருவாதவூா் அருகே மாங்குளத்தில் ஓவா மலை உள்ளது. இங்கும் சமணா் படுக்கை உள்ளிட்ட புராதன சின்னங்கள் உள்ளன. முறையான சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், இந்த 2 இடங்களிலும் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் பாா்க்கச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் காவலா் நியமிக்கப்படாததால், சமூக விரோத குற்றச் செயல்களில் சிலா் ஈடுபடுகின்றனா்.

எனவே, புராதனச் சின்னங்களை பொதுமக்கள் எளிதில் சென்று பாா்வையிடுவதற்கான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதுடன், அப்பகுதிகளில் காவலா்கள் நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ஒத்தக்கடை யானைமலை, ஓவா மலையில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாப்பது குறித்து வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா், தொல்லியல் துறை முதன்மைச் செயலாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT