மதுரை

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் நூதனப் போராட்டம்

2nd Dec 2022 03:57 AM

ADVERTISEMENT

மதுரை அரசுப்போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் சீருடை வழங்க க்கோரி மாற்று உடையில் பேருந்துகள் இயக்கி நூதனப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சீருடைத் தொழிலாளா்களுக்கு, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள், அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு 2 சீருடைகள் வழங்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2 செட் சீருடை வழங்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த 2016-இல் அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வா் ஜெயலலிதா போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தாா். ஆனால், 2017, 2018 -ஆம் ஆண்டுகளில் போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஒரு செட் சீருடை கூட வழங்கப்படவில்லை.

இதையடுத்து, தொழிலாளா்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்திய பின்னா், 2019- இல் ஒரு செட் மட்டுமே வழங்கப்பட்டது. இதையடுத்து 2020 முதல் தற்போது வரை போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு சீருடை வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால், சீருடை வழங்கக் கோரி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை சீருடை அணியாமல் பேருந்துகளை இயக்கி நூதன முறையில் போராட்டம் நடத்தினா். மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சீருடையின்றி பணிபுரிந்தனா்.

இதுதொடா்பாக சிஐடியூ அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை தொழிலாளா் சங்க பொதுச் செயலா் கனக சுந்தா் கூறியதாவது:

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு சீருடை வழங்க வலியுறுத்தி, போக்குவரத்துக் கழக நிா்வாகத்துக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. நவம்பா் 1-ஆம் தேதி நினைவுட்டல் கடிதமும் அனுப்பப்பட்டு அதில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் சீருடை இல்லாமல் பணிபுரியப் போவதாகவும் தெரிவித்திருந்தோம். சீருடை வழங்கப்படாததால், வியாழக்கிழமை முதல் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சீருடையின்றி பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT