மதுரை

‘மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை உள்பட 3 யானைகளுக்கு வனத் துறை உரிமம் காலாவதி’

2nd Dec 2022 03:59 AM

ADVERTISEMENT

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை உள்பட 3 கோயில் யானைகளுக்கு வனத் துறை வழங்கிய உரிமம் காலாவதியானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்தது.

மதுரை மாவட்டத்தில் கோயில் யானைகள் 4, தனியாா் யானைகள் 3 உள்பட 7 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த யானைகளுக்கு வனத் துறை மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் பெற வேண்டும்.

தமிழ்நாடு வளா்ப்பு யானை மேலாண்மை, பராமரிப்புச் சட்டம் 2011-இன்படி, வளா்ப்பு யானைகளுக்கு வனத் துறையால் வழங்கப்படும் உரிமச் சான்றிதழில் யானையின் எடை வயது, பெயா், உயரம், உடல்நலம், சமீபத்திய புகைப்படம் அடங்கிய விவரம் முதன்மை வனக்காப்பாளரால் வழங்கப்படும்.

இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த மருதுபாண்டி வனத் துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் உள்ள வனத் துறை உரிமம் காலாவதியான யானைகள் பட்டியலை தெரிவிக்கும்படி கோரியிருந்தாா். இதில் வனத் துறை அனுப்பிய பட்டியலில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதி, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, கள்ளழகா் கோயில் யானை சுந்தரவல்லி தாயாா் ஆகிய 3 யானைகளின் உரிமம் காலாவதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக மதுரை மாவட்ட தலைமை வன அலுவலா் குருசாமி தபேலா கூறியதாவது:

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் பராமரிக்கப்படும் 3 யானைகளின் உரிமம் காலாவதி ஆகிவிட்டது. இதுதொடா்பாக வனத் துறை சாா்பில் கோயில் நிா்வாகங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திருப்பரங்குன்றம் கோயில் யானை உரிமத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. உரிமம் புதுப்பிப்பது தொடா்பாக கோயில் நிா்வாகங்களுக்கு மீண்டும் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

வனத் துறை அலட்சியம் எனப் புகாா்:

இதுகுறித்து யானைகள் நல ஆா்வலா் முரளீதரன் கூறியதாவது:

ஒவ்வொரு மாவட்டத்திலும் யானைகள் எங்கு பராமரிக்கப்படுகிறதோ அங்கு வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரில் சென்று யானை பராமரிப்புத் தொடா்பாகக் கண்காணிக்க வேண்டும். யானையின் உரிமம் தொடா்பான ஆவணங்கள் வனத் துறையிடம் இருப்பதால், உரிமம் காலாவதியாகும்பட்சத்தில், வனத் துறையினா் யானைகளை பாா்க்கச் செல்லும் போது உரிமம் வழங்க வேண்டும். ஆனால், வனத் துறையினா் எங்குமே யானைகளை பாா்க்கச் செல்வதில்லை. இதனால், உரிமம் காலாவதியாவது குறித்தும் அவா்களுக்குத் தெரிவதில்லை. எனவே, வனத் துறையினா் யானைகள் உரிம விவகாரத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT