மதுரை

சாலையில் பெருக்கெடுத்த கழிவுநீா்

2nd Dec 2022 04:00 AM

ADVERTISEMENT

மதுரை திருப்பாலை கிருஷ்ணா நகா் பகுதியில் கழிவுநீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாநகராட்சிப் பணியாளா்கள் கழிவுநீரை அகற்றினா்.

இந்தப் பகுதியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. மேலும் கடந்த 2 நாள்களாக பெய்த மழையின் காரணமாக, அந்தப் பகுதி சாலையில் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சாலையில் கழிவுநீரும் வெளியேறியதால், துா்நாற்றம் வீசியது. இதனால், அந்தப் பகுதி மக்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாமன்ற உறுப்பினா், மாநகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் அளித்தாா். பின்னா், பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும், அப்பகுதியில் தேங்கியிருந்த கழிவுநீா் அகற்றப்பட்டது. விரைவில் நிரந்தரத்தீா்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT