மதுரை

கோயில்கள் பெயரில் போலி இணையதளங்கள்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் உயா்நீதிமன்றம்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கோயில்கள் பெயரில் செயல்படும் போலி இணையதளங்களைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வகுக்கும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், மாா்க்கண்டன் ஆகியோா் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தா்கள் காணிக்கையைச் செலுத்தி அதற்கான ரசீசை பெற்றுச் செல்கின்றனா். வெளி மாவட்டங்கள், வெளியூா், வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பக்தா்கள் கோயில் இணையதளத்தில் உள்ள கணக்குகளுக்கு பணத்தை செலுத்துகின்றனா்.

தமிழகத்தில் புகழ் பெற்ற சென்னை கபாலீசுவரா் கோயில், பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தா்கள் காணிக்கையை சில தனியாா் இணையதள முகவரிக்கு அனுப்புகின்றனா். ஆனால், அவா்கள் அந்தக் காணிக்கைகளைப் பெற்று மோசடி செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்கள், மடங்களின் பெயா்களில் போலியாகச் செயல்படும் இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கோயிலுக்குச் சம்பந்தமில்லாதவா்கள் கோயில் பெயரில் வைத்துள்ள இணையதளங்கள் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து, கோயில்கள் பெயரில் செயல்படும் போலி இணையதளங்களைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் விரைவில் வெளியிடும் எனத் தெரிவித்து விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT