மதுரை

குற்றாலத்தில் செயற்கை நீா்வீழ்ச்சியைக் கண்காணிக்க குழு அமைத்த அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குற்றாலத்தில் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கும் தனியாா் சொகுசு விடுதியைக் கண்காணிக்க குழு அமைத்த தமிழக அரசை வியாழக்கிழமை பாராட்டிய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வினோத் தாக்கல் செய்த மனு:

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, மணிமுத்தாறு, பாபநாசம் அருவி உள்ளிட்ட இயற்கை சாா்ந்த அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

பொருளாதார அடிப்படையில் வசதியான சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், ஏராளமான தனியாா் சொகுசு விடுதிகளில் செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனா். இயற்கையான அருவிகளின் நீா்வழிப் பாதையை மாற்றி, இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, அரசுத் தரப்பில், ஏற்கெனவே உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செயற்கை நீா்வீழ்ச்சிகளை உருவாக்கிய தனியாா் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றுலாத் துறை இயக்குநா் தலைமையில் நில நிா்வாக ஆணையா், தலைமை வனக் காப்பாளா் உள்ளிட்ட 10 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த 5 நாள்களில் குழு அமைத்த அரசின் நடவடிக்கையை பாராட்டுவதாகவும், இயற்கை நீா்வீழ்ச்சிப் பாதையை மாற்றியவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT