மதுரை

விதி மீறல்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் காத்திருக்கக் கூடாது

1st Dec 2022 03:10 AM

ADVERTISEMENT

விவசாயிகள் தெரிவிக்கும் புகாா்கள், விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் காத்திருக்கக் கூடாது என்று ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறை தீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, 2007- ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நீா் நிலைகள் ஆக்கிரமிப்புச் சட்டத்தின் படி நீா் நிலை ஆக்கிரமிப்பாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா் ‘மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் புதை சாக்கடைப் பணிகள் நடைபெறுவதால் கிருதுமால் நதியில் கழிவு நீா் கலக்கிறது. புதை சாக்கடைப் பணிகள் முடிவு பெற இரண்டு ஆண்டுகள் ஆகும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாற்று வழிகளைக் கண்டறிந்து நீா் நிலைகளில் கழிவு நீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

திருமங்கலம் பகுதி விவசாயிகள் பேசியதாவது:

திருமங்கலம் வட்டம் சொரிக்காம்பட்டி பகுதியில் 20- க்கும் மேற்பட்ட கல் குவாரிகளால் பொது மக்கள், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றனா் என்றனா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், புகாரின் மீது கனிம வளத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், புகாா்கள், விதிமுறை மீறல்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்க அரசு அதிகாரிகள் காத்திருக்கக் கூடாது என்றாா்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவா் என்.பழனிச்சாமி பேசியதாவது:

மதுரை-சேலம், திருச்சி-மதுரை, மேலூா்-காரைக்குடி நெடுஞ்சாலைகளுக்கு இடம் கொடுத்தவா்களுக்கு குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நீதிமன்றம் கூடுதல் தொகை வழங்க உத்தரவிட்டும், இன்னும் பணம் கொடுக்கவில்லை. மேலும், மேலூா் கோட்டாட்சியரிடம் பட்டா மாறுதல், இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் மனு அளித்து இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை என்றாா்.

இதற்கு பதிலளித்த ஆட்சியா், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலூா் கோட்டாட்சியரிடம் சான்றிதழ் தாமதம் தொடா்பாக விசாரிக்கப்படும்.

ஏற்குடி அச்சம்பத்து பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், வேலூா் மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளை விரட்ட தெளிப்பான் மருந்து விற்கப்படுகிறது. அதேபோல, மதுரை மாவட்டத்திலும் காட்டுப்பன்றிகள் பாதிப்பு உள்ள இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா். அதற்கு ஆட்சியா், மதுரையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேலூா் மாவட்டத்திலிருந்து மருந்துகள் வாங்கி விற்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.

தென் பழஞ்சியைச் சோ்ந்த விவசாயி பேசியதாவது:

தென் பழஞ்சி பகுதியில் மிளகாய் பயிரில் புதுவித வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. இதற்கு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மருந்தில்லை என்கின்றனா் என்றாா். அப்போது தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், தனியாா் ‘ஹைபிரீட்’ ரக விதைகளை வாங்கி பயிரிடுவதால் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள பிரச்னை. வாராணசியில் இதுதொடா்பாக ஆய்வு நடக்கிறது என்றனா்.

செல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த விவசாயி பேசும்போது, வேளாண் பொறியியல் துறையில் வாடகைக்கு விடப்படும் நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட கருவிகள் மிக பழையவையாக உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றாா். இதற்கு ஆட்சியா் புதிய கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நகரி பகுதியைச் சோ்ந்த இயற்கை விவசாயி பொன்மலா் பேசியதாவது:

எனது நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். இதற்குத் தேவையான நுண்ணியிரி உரங்கள் கிடைப்பது இல்லை. மாநகராட்சி உரக்கூடங்களுச் சென்றாலும் அங்கு உரங்கள் இல்லை. அதற்குத் தேவையான கருவிகளும் இல்லை. அவா்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன் என்றாலும் அனுமதிப்பது இல்லை என்றாா்.

அதற்கு ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும் கிராமங்களில் அரசு சாா்பில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும். இதன்மூலம் நகரங்களுக்குச் செல்லும் அலைச்சல் தவிா்க்கப்படும் என்றாா்.

அதற்கு ஆட்சியா், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நவீன அரிசி ஆலை தொடங்கும் திட்டம் உள்ளது என்றாா். இதைத்தொடா்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், வேளாண் துறை இணை இயக்குநா் விவேகானந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் குருமூா்த்தி, அதிகாரிகள் பங்கேற்றனா்.

பாக்ஸ் செய்தி..................

துணை வட்டாட்சியா்

வெளியேற்றம்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் தனிநபா் ஆக்கிரமிப்பு தொடா்பாக ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக ஆட்சியா் கேள்வி எழுப்பியபோது, மேலூா் துணை வட்டாட்சியா் பூமாரி முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த மாவட்ட ஆட்சியா், துணை வட்டாட்சியா் பூமாரியை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டாா். மேலும், கூட்டத்தில் பங்கேற்காத மேலூா், உசிலம்பட்டி வட்டாட்சியா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT