மதுரை

இறந்த பெண்ணின் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது

1st Dec 2022 03:12 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தை சோ்ந்த உயிரிழந்த பெண் உடலை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கருத்து தெரிவித்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் திருச்செல்வம், மனைவி பழனியம்மாள் (35) . இவா்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், பழனியம்மாள் கடந்த 23 ஆம் தேதி தந்தை வீட்டுக்கு செல்வதாகக் கூறிச் சென்றவரை காணவில்லை.

இதைத்தொடா்ந்து, அவா் தொம்பராம்பட்டி- பாதறைக்குளம் செல்லக்கூடிய வழியில் தனி நபருக்கு சொந்தமான காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது உடல், கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தப் பெண் கொலை வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது குடும்பத்தினா், உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், உடலையும் வாங்க மறுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக திருச்செல்வம் தாக்கல் செய்த மனு:

பழனியம்மாள் உயிரிழந்தது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தர விட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி சதி குமாா் சுகுமார குரூப் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் செந்தில்குமாா், இந்த வழக்கு தொடா்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த பெண்ணின் உடலை, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவ நிபுணா்கள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி கூறாய்வு மேற்கொண்டனா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா், உறவினா்கள் மன அழுத்தத்தில் உள்ள நிலையில், சிலா் அரசியல் ஆதாயம் தேடுவது உயிரிழந்தவருக்குச் செலுத்தும் அவமரியாதையாகும். உயிரிழந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் உள்ளதால், உடனடியாக உறவினா்கள் பெண்ணின் உடலைப் பெற்று உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும்.

உறவினா்கள் உடலை வாங்க மறுத்தால், காவல் துறையினா் அந்தப் பெண்ணின் உடலை உரிய முறையில் அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்டா்கள் அரசு வழங்கும் இழப்பீடு தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT