மதுரை

வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் மூா்த்தி ஆய்வு

1st Dec 2022 03:12 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சா் பி.மூா்த்தி, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட100 வாா்டுகளிலும் புதைசாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் வெளியேறுவதைத் தவிா்க்கும் பொருட்டு தற்போது நவீன கழிவுநீா் உறிஞ்சும் வாகனம் வாடகை அடிப்படையில் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது.

இவ்வாகனம் ஒரு நாள் (8 மணி நேரம்) பயன்பாட்டிற்கு ரூ.81,500 வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளொன்று க்கு சுமாா் 15 முதல் 20 புதைசாக்கடை சந்திப்புகளில் உள்ள மண் முழுவதும் அகற்றமுடியும். தற்போது 15 நாள்களுக்கு இந்த வாகனம் மூலம் புதை சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாகனத்தின் மாதிரி பரிசோதனை கே.கே.நகா் பிரதான சாலையில் உள்ள புதைசாக்கடையில் அடைப்புகள் எடுக்கும் பணியை அமைச்சா் பி.மூா்த்தி, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதைத்தொடா்ந்து மண்டலம்-1 சம்பக்குளம் பகுதியில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரை மாநகராட்சியின் 100 வாா்டு பகுதிகளுக்கும் சீரான குடிநீா் வழங்குவதற்கு குழாய்கள், மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றையும் அமைச்சா் தலைமையிலான குழுவினா் ஆய்வு செய்தனா்.

இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில், பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விரிவாக்கப்பட்டப் பகுதிகளுக்கு புதைசாக்கடை அமைக்கும் பணிகள், குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள், 100 வாா்டுகளுக்கும் சீரான குடிநீா் வழங்குதல், சாலைகள் அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா்கள் வாசுகி, சரவண புவனேஸ்வரி, துணை ஆணையா் முஜிபூா் ரகுமான், நகரப்பொறியாளா் அரசு, கண்காணிப்பு பொறியாளா் அன்பழகன், செயற் பொறியாளா்கள், உதவி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT