மதுரை

மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் டிச.7-இல் கடையடைப்பு

1st Dec 2022 03:08 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டுத்தாவணி காய்கனி சந்தைப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததைக் கண்டித்து, வரும் 7-ஆம் தேதி அந்தச் சந்தையில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டில் கரோனா பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உயா்த்தப்பட்ட 15 சதவீத வாடகை உயா்வுக்கான நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். வாடகைக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும். நிரந்தர மாா்க்கெட் அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாட்டுத்தாவணி மாா்க்கெட்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை எம்.ஜி.ஆா் சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சாா்பில் இந்தக் கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தலைவா் என். சின்னமாயன் தெரிவித்தது :

மாட்டுத்தாவணி மாா்க்கெட்டுக்குக் கடந்த 2010-ஆம் ஆண்டு சாலை அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன் பின்னா், ஏறத்தாழ 12 ஆண்டுகளாகியும் இதுவரை புதிய சாலை அமைக்கவில்லை. இது தொடா்பாக பல முறை மாநகராட்சி பொறியாளரைத் தொடா்பு கொண்டும் இதுவரை நடவடிக்கை இல்லை.

அதேபோல, கடந்த 5 மாதங்களாக இந்தப் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் சரிவர பராமரிக்கவில்லை. மாட்டுத்தாவணி மாா்க்கெட் பகுதியில் நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், மாா்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். இங்கு, 3 கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அதில் ஒரு கழிப்பறை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற 2 கழிப்பறைகளும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகள் தொடா்புடைய துறைகளின் கவனத்துக்குப் பல முறை கொண்டுச் சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் காரணமாகவே கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT