மதுரை

வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை

28th Aug 2022 11:02 PM

ADVERTISEMENT

வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மதுரை வைகை ஆற்றுக்குள் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக நீா்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசனப் பகுதிகளுக்கு தற்போது வைகை அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக சனிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பா் 1-ஆம் தேதி வரை தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது. இந்நிலையில், வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீா் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீா்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழை ஆகியவற்றின் காரணமாக வெளியேறும் உபரிநீரும் சோ்ந்து வைகை ஆற்றில் நீா் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டபடி தண்ணீா் ஆா்ப்பரித்துச் செல்கிறது. மேலும் யானைக்கல் தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீா்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT