மதுரை

‘நிறைவேறாத கோரிக்கைகள் மீது முதல்வா் கவனத்தை ஈா்க்கவே ஜாக்டோ- ஜியோ மாநாடு’

28th Aug 2022 11:00 PM

ADVERTISEMENT

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் நிறைவேறாத கோரிக்கைகள் மீது முதல்வரின் கவனத்தை ஈா்க்கவே ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார மாநாடு நடத்தப்படுகிறது என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலா் ச. மயில் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் மூ. மணிமேகலை தலைமை வகித்தாா். மதுரை மாவட்டச் செயலா் பெ. சீனிவாசகன் வரவேற்றாா். மாநில செயற்குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் பொதுச் செயலா் ச. மயில் செய்தியாளா்களிடம் கூறியது:

ஜாக்டோ-ஜியோ சாா்பில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு வரும் செப்டம்பா் 10 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் பங்கேற்க உள்ளனா். ஜாக்டோ- ஜியோவின் மிக முக்கிய உறுப்பு சங்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்பது என மாநிலச் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாழ்வாதாரக் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கடந்த 2 ஊதியக்குழுக்களில் மிகுந்த ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள் ஆகியோரின் ஊதிய பாதிப்புக்களைச் சரி செய்தல், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், செவிலியா்கள், பகுதிநேர சிறப்பாசிரியா்கள் உள்ளிட்டோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கும் தேதியிலிருந்து வழங்குதல், ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்யும் உரிமையை மீண்டும் வழங்குதல், ஆசிரியா்களுக்கு உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை மீண்டும் வழங்குதல், கல்வித்துறையில் ஆசிரியா்களின் கற்பித்தல் பணியைப் பாதிக்கும் வகையிலான இணையதளப் பதிவுகள் மேற்கொள்ளக் கூறுவதைக் கைவிடுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன.

ADVERTISEMENT

இக்கோரிக்கைகளின் மீது முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. ஆசிரியா், அரசு ஊழியா்கள் நலனில் அக்கறை கொண்ட முதல்வா் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு உள்ளது என்றாா்.

மாநில துணைத்தலைவா் மா. ஆரோக்கியராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT