மகாத்மா காந்தியடிகள் விரும்பிய சுதந்திரத்தைப் பெற நமது அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் அவசியம் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் கூறினாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகத்துடன் இணைந்து சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி ‘வழக்குரைஞா் காந்தி‘ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக் கண்காட்சியை சனிக்கிழமை தொடக்கி வைத்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசியது:
காந்தி நினைவு அருங்காட்சியகத்திற்கு வருவதைப் புனித பயணமாகக் கருதுகிறேன். உண்மை இல்லையென்றால் நீதி இல்லை. நீதிக்கு மிகவும் அடிப்படையானது உண்மை. தான் வழக்குரைஞராகப் பணியாற்றியபோது ஒரு வழக்கில் கூட பொய் சாட்சி தயாா் செய்ததில்லை என மகாத்மா காந்தியடிகள் கூறியிருக்கிறாா். வெளிநாடுகளில் பொய் கூறுவது என்பது மிகப் பெரிய தவறாகப் பாா்க்கப்படுகிறது. குற்றம் என்பதைக்காட்டிலும் குற்றம் இழைத்ததை மறுத்து பொய் கூறுவது மிகப்பெரிய தவறு. ஆனால், சேவை என்பது தொழிலாக மாறும்போது அதற்கே உரிய சில பின்னடைவுகள் ஏற்படுகின்றன.
நமது நாடு அரசியல் ரீதியான விடுதலையைத் தான் பெற்றிருக்கிறது. அறியாமை மற்றும் வறுமையிலிருந்தும், பெண் விடுதலையையும் காந்தியடிகள் விரும்பினாா். அதற்கு நமது அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் வரவேண்டும் என்றாா்.
அருங்காட்சியாக துணைத்தலைவா் என். எம் .ஆா்.கே. ஜவஹா் பாபு, செயலா் கே.ஆா். நந்தாராவ், பொருளாளா் வழக்குரைஞா் செந்தில்குமாா், செயற்குழு உறுப்பினா் ந.ராமலிங்கம் உள்ளிட்டோா் பேசினா். அருங்காட்சியக கல்வி அலுவலா் ஆா். நடராஜன், ஆராய்ச்சி அலுவலா் ஆா்.தேவதாஸ், காந்தி இலக்கிய சங்கத் தலைவா் பி.என்.சந்திர பிரபு, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செயலா் எஸ். டி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.