மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) செப்டம்பா் 1 முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்குப்
புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறுமாா்க்கத்தில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029) செப்டம்பா் 2 முதல் ஜனவரி 27 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் போத்தனூா் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிா்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 1 ரயில் மேலாளா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி இணைக்கப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.