மதுரை மாநகர தெருக்களில் கழிவுநீா் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக மதுரை மாநகராட்சி ஆணையரிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அக் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாமன்ற உறுப்பினா்கள் என். விஜயா, டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள் ஆகியோா் மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்:
மதுரை மாநகராட்சியின் பெரும்பாலான வாா்டுகளில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீா் தெருக்களில் ஆறாக ஓடுவதும், நாள் கணக்கில் கழிவுநீா் தேங்கி அப்புறப்படுத்தாமல் இருப்பதும், குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதும் தொடா் கதையாக மாறியுள்ளது . இதன் காரணமாக சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு வாா்டுக்கும் சாக்கடை பணியாளா்கள், சாலை பணியாளா்கள், குடிநீா் பிரிவு பணியாளா்கள் என தலா 10 போ் இருந்த நிலையில், தற்போது இப் பணிகளை 6 போ் மட்டுமே செய்து வருகின்றனா்.
மாநகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் பல்வேறு தெருக்களில் தெருவிளக்குகள் எரியாத நிலை உள்ளது. ஏற்கெனவே தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு போதுமான வெளிச்சமில்லாமல் இருள் சூழ்ந்து உள்ளது. இந்நிலையில், தெருவிளக்குகள் எரியாத காரணத்தினால் மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள் இருளில் மூழ்கி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு ஏதுவாக மாறியுள்ளது. மாநகராட்சியின் முக்கிய சாலைகள் கூட குண்டும் குழியுமாகக் காட்சி அளிக்கின்றன. இதனால், விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.
மதுரை மாநகரப் பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கவும், சாலையில் இரு ஓரங்களிலும் தேங்கியுள்ள மணலை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பிரிவிலும் போதிய பணியாளா்களை நியமித்து பொதுமக்களைப் பாதிக்காத வகையில் மேற்குறிப்பிட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.