மதுரை

இடையபட்டியில் புதிய மத்திய சிறை: காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஆய்வு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 மதுரை அருகே உள்ள இடையப்பட்டியில் புதிய மத்திய சிறை அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய சிறையாக உள்ள மதுரை மத்திய சிறை 1865-இல் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அதிகரித்துவரும் குற்றச்செயல்களால் சிறையில் அடைக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக சிறையில் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சிறையை மதுரை புகா் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இதை ஏற்ற தமிழக அரசு மதுரை மாவட்டம் இடையபட்டியில் மத்திய சிறையை இடமாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இடையபட்டியில் மத்திய சிறை வளாகம் அமைக்க 85 ஏக்கா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் புழல் சிறைக்கு இணையாக அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. புதியசிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை மற்றும் நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள், காவலா் குடியிருப்பு, காவலா் அங்காடி, தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும் கட்டப்பட உள்ளன.

இந்நிலையில் மதுரைக்கு வியாழக்கிழமை வருகை தந்த தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன், இடையபட்டிக்கு சென்று அங்கு மத்திய சிறை கட்டப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டாா். மேலும் சிறை வளாகம் தொடா்பாக அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தாா். அவருடன் சிறைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT