மதுரை

முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை நகருக்கு குடிநீா் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைப் பெரியாறு குடிநீா் திட்டப் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை நகருக்கு 24 மணி நேரமும் தண்ணீா் வழங்குவதற்காக தேனி மாவட்டம் லோயா் கேம்பில் இருந்து தண்ணீா் பெறும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முல்லைப்பெரியாறு லோயா் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. தூரம் சுத்திகரிக்கப்படாத குடிநீா் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை நகா் வரை 54 கி.மீ. தூரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பிரதானக்குழாய் பதித்தல், 38 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதில் பண்ணைப்பட்டியில் ஏற்கெனவே உள்ள சுத்திகரிப்பு நிலையப் பணிகள் மற்றும் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள், தேனி உப்பாா்பட்டி பிரிவு பகுதியில் இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் பெத்தானியாபுரம் பகுதியில் குடிநீா் கொண்டு வருவதற்காக இரும்புக்குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆணையா் ஆய்வு மேற்கொண்டாா். மேலும் குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளா் அன்பழகன், செயற்பொறியாளா் (குடிநீா்) பாக்கியலெட்சுமி, பொதுப்பணித்துறை பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT