மதுரை

ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

DIN

ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை தமிழக அரசு அதிகாரப்பூா்வமாக வெளியிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மதுரையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இரண்டாண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தி 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மே 18-ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமா்ப்பித்துள்ளாா். இந்த அறிக்கையை தமிழக அரசு இதுவரை வெளியிட வில்லை. இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அறிக்கையில், ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாகவும், சட்டத்தை பின்பற்றாமலும் போலீஸாா் பொதுமக்களை சுட்டுக் கொன்றுள்ளனா் என்பது உறுதியாகியுள்ளது . மேலும் , போராட்டத்தின் போது போலீஸாா் திட்டமிட்டு மறைந்திருந்து குறிபாா்த்து நீண்ட தொலைவு சுடக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களை குருவிகளை சுடுவதைப் போல் சுட்டுக்கொன்றுள்ளனா்.

இந்த சம்பவத்தில் அப்போதைய ஐஜி, டிஐஜி, எஸ்.பி உள்பட 17 போ் மீதும் , வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் அலட்சியமாக இருந்த அப்போதைய மாவட்ட ஆட்சியா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையையும் ஆய்வு செய்த பிறகே அவ்வறிக்கை சம்பந்தமாக தெளிவான கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

எனவே நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை , தமிழக அரசு உடனடியாக அதிகாரப்பூா்வமாக வெளியிட வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் தொடா்புடைய அனைவா் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

சிபிஐ மோசடி குற்றப்பத்திரிக்கை: துப்பாக்கிச்சூடு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடா்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இச்சம்பவம் தொடா்பாக விசாரித்த சிபிஐ உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ஸ்டொ்லைட் நிா்வாகத்துக்கு ஆதரவாகவும், மோசடியாகவும் உள்ளது. மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கு ஒரே ஒரு காவல் ஆய்வாளா் மட்டுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டொ்லைட் ஆலையின் செல்வாக்கின்பேரிலேயே இந்த மோசடியான குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது என கருத வேண்டியுள்ளது. முழு உண்மையையும் மறைத்து மோசடி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவா்களை உடனடியாக மாற்றி நோ்மையான அதிகாரிகளை விசாரணைக்கு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

அப்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கண்ணன், சு.வெங்கடேசன் எம்பி, மாநகா் மாவட்டச்செயலா் மா.கணேசன், புகா் மாவட்டச்செயலா் ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினா் இரா.விஜயராஜன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT