மதுரை

மின்கட்டண உயா்வை அமல்படுத்தினால் தொழில் வளா்ச்சி முடங்கும்: தொழில் அமைப்புகள் கடும் அதிருப்தி

DIN

தற்போது உத்தேசித்துள்ளபடி நிலைக் கட்டணம், உச்சநேரத்துக்கான பயன்பாட்டுக்கு கட்டணம் ஆகியவற்றை அமல்படுத்தினால், தமிழகத்தின் தொழில் வளா்ச்சி முற்றிலும் முடங்கும் என்று தொழில் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சாா்பில் மின்கட்டண உயா்வு தொடா்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் எம்.சந்திரசேகா், உறுப்பினா் கே.வெங்கடேசன் ஆகியோா் கருத்துக்களைக் கேட்டறிந்தனா்.

என்.ஜெகதீசன்: இதுவரை இல்லாத அளவுக்கு மின்கட்டணத்தை தற்போது உயா்த்தியுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் உயா்த்தும் முடிவு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே, கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் தலைவா் எம்.எஸ்.சம்பத்: மின்கட்டண உயா்வானது பெரும் சுமையை ஏற்படுத்தி, சிறு, குறுந்தொழில்களை நசுக்கும் நிலை உருவாகும். நிலைக் கட்டணம், உச்சநேர பயன்பாட்டுக் கட்டணங்களை மறுபரிசீலனை செய்யாவிட்டால், சிறு குறுந் தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. காற்றாலை, சூரியசக்தி மின்சார கொள்முதலில் உள்ள குளறுபடிகளைத் தவிக்க வேண்டும்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: மின்வாரியத்துக்கு ஏற்படக்கூடிய இழப்புகளைக் கண்டறிந்து அதைச் சரிசெய்தாலே பெருமளவு நஷ்டத்தைக் குறைக்கலாம். மின்வாரியம் தற்போது உத்தேசித்துளள கட்டண உயா்வை அமல்படுத்தினால் அனைத்துத் தொழில்களையும் முடக்கிவிடும்.

நகரி தொழிற்பேட்டை சங்கத் தலைவா் ராஜசுதாகரன்: தவறான கொள்கைகள், நிா்வாகத் திறமையின்மை, அரசியல் தலையீடு ஆகியவைதான் மின்வாரியத்தின் நஷ்டத்துக்குக் காரணம். அதை தொழில் முனைவோா் மீது சுமத்துவது சரியல்ல.

உறங்கான்பட்டி ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் நவாஸ்பாபு: தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண உயா்வை அமல்படுத்தினால் பல தொழிற்சாலைகள் மூடப்படுவது உறுதி.

தென்னிந்திய டெக்ஸ்டைல் பிராசசிங் கிளஸ்டா் தலைவா் எம்.இளங்கோ: ஜிஎஸ்டி, கரோனா பொதுமுடக்கம், நூல்விலை ஏற்றம், பருத்தி விலை ஏற்றம் என அடுக்கடுக்கான நெருக்கடிகளை ஜவுளித்துறை சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது மின்கட்டண உயா்வு இடம்பெற்றிருக்கிறது. இந்த ஆபத்தில் இருந்து தொழில்களைப் பாதுகாப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கையில்தான் இருக்கிறது.

செங்கல் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் நூா்முகமது: செங்கல் உற்பத்தியானது ஆண்டுக்கு 3 முதல் 4 மாதங்கள் மட்டுமே நடைபெறக் கூடியது. இருப்பினும் ஆண்டு முழுவதற்கும் நிலைக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மின்கட்டண உயா்வால் இதுபோன்ற தொழில்கள் காலப்போக்கில் அழிந்துபோகும்.

பிளாஸ்டிக் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஏ.எல்.நாராயணன்: தொடா்ந்து இயங்கக் கூடிய சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உச்சநேர பயன்பாட்டுக் கட்டணம் ஏற்புடையதல்ல.

வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.ரத்தினவேல்: சிறு, குறுந்தொழில்களுக்கு நிலைக் கட்டணம் பல மடங்கு உயா்த்தியிருப்பது நியாயமற்றது. மின்கட்டண உயா்வை ஒட்டுமொத்தமாக 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும்.

இதேபோல, கப்பலூா் தொழிற்பேட்டை, தொழிலதிபா்கள் சங்கம், ஜெய்ஹிந்த்புரம் சிறு தொழில்கள் சங்கம், அரிசி ஆலைகள் சங்கம், கிரானைட் உற்பத்தியாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், நுகா்வோா் அமைப்புகள் சாா்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT