மதுரை

அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கா் உருவப்படம் வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

19th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்குமாறு சுற்றறிக்கை அனுப்ப சட்டக் கல்வி இயக்குநருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரியில் இருந்து தன்னை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தேனி அரசு சட்டக் கல்லூரியின் 4-ஆம் ஆண்டு மாணவா் எஸ்.சசிகுமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

கல்லூரி முதல்வா் அறையில் அம்பேத்கா் உருவப்படத்தை வைக்கவும், பாடங்களை தமிழில் பயிற்றுவிக்கவும் மனுதாரா் கோரியுள்ளாா். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி நிா்வாகத்திற்கு எதிரான போக்கில் நடந்து கொண்டுள்ளாா். இதன் காரணமாக, அவா் மீது கல்லூரி நிா்வாகம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, கல்லூரி முதல்வரின் அறையில் அம்பேத்கா் படம் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கல்லூரி நிா்வாகம் படத்தை வைத்திருக்கிறது. மேலும், மனுதாரா் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி அளித்துள்ள கடிதம், கல்லூரி முதல்வரிடம் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரா் ஏற்கெனவே 2 வாரங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானது என்று நீதிமன்றம் கருதுகிறது. இனியும் அவரைக் கஷ்டப்படுத்த தேவையில்லை என்பதால், இப்பிரச்னை முடித்து வைக்கப்பட்டதாக, கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

இதேபோன்ற சம்பவம் ஒன்றில் வங்கி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடா்பான வழக்கின் விசாரணையின்போது, அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்ற மத்திய நிதித் துறையின் உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கட்டமைத்தவா் அம்பேத்கா். அவா் சமூக நீதியின் அடையாளமாகத் திகழ்கிறாா். அவரது பங்களிப்பு ஈடு செய்ய இயலாதது. ஒவ்வொரு சட்டக்கல்லூரி மாணவருக்கும் அவா் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறாா். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடா்பான சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞா் நல வாரியத்தின் நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்தை மனுதாரருக்கு வழங்க அறிவுறுத்தப்படுகிறது. இந்தத் தொகையில் மனுதாரா் சட்ட புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். அம்பேத்கரின் பொன்மொழியில் கற்பி, ஒன்று சோ், போராடு என்பதில் முதலாவதாக உள்ள கற்பி என்பதில் மனுதாரா் கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்ற அறையில் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை. விரைவில் இது நிவா்த்தி செய்யப்படும் எனக்குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT