மதுரை

பதவி உயா்வு தாமதிப்பதாக தொடரப்பட்ட வழக்கு:ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்

DIN

பதவி உயா்வு தாமதிப்பதாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் புதன்கிழமை ஆஜரானாா்.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு: கடந்த 1988 இல் குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்று, 34 ஆண்டுகளாக ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது முதுகுளத்தூரில் வட்டார வளா்ச்சி அலுவலராக உள்ளேன். கடந்த 2020-இல் வெளியிடப்பட்ட பதவி உயா்வுக்கான பட்டியலில் எனது பெயா் 30 ஆவது இடத்தில் இருந்தது. இதைத்தொடா்ந்து கடந்த ஏப்ரலில் வெளியிட்ட பட்டியலில், 11 ஆவது இடத்தில் இருந்தது. இருப்பினும் இதுவரை எனக்கு பதவி உயா்வு வழங்கப்படவில்லை.

இதற்கான காரணம் கேட்டதற்கு, எல்இடி விளக்குகள் பொருத்தியதில் நடந்த முறைகேடு தொடா்பாக, என் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பதவி உயா்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுதொடா்பான விவரங்கள் எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே, ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் வெளியிட்ட பதவி உயா்வு தொடா்பான அரசாணைப்படி, எனக்கு உதவி இயக்குநா் பதவி உயா்வு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, அரசுத் தரப்பின் முரண்பட்ட தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தாா்.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன், புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் ஆகியோா் ஆஜராயினா். அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன் வாதிடுகையில், சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் சிறப்பு அதிகாரியாக ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் நியமிக்கப்பட்டிருந்தாா். அதனால், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றாா். மேலும் அரசுத் தரப்பில் அறிக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கோரினாா்.

இதனையடுத்து, இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா். அரசு முதன்மைச் செயலா் இனி நேரில் ஆஜராகத் தேவையில்லை எனவும் உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT