மதுரை

தூத்துக்குடி சிப்காட் 2-ஆவது பிரிவு அனுமதியில் விதிமீறல் புகாா்:நடவடிக்கை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை 2-ஆவது பிரிவுக்கு அனுமதி பெற்றதில் விதிமீறல் நடைபெற்ாக அளிக்கப்பட்ட புகாா் மீது பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சோ்ந்த முத்துராமன் தாக்கல் செய்த மனு: பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருக்கும் ‘ஸ்டொ்லைட்’ ஆலை, தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டையின் முதலாவது பிரிவில் உள்ளது. இந்த தொழிற்பேட்டையை விரிவுபடுத்தி பிரிவு 2-ஐ அமைக்க சிப்காட் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை கடந்த 2018 ஜனவரி 25 ஆம் தேதி நடத்த திட்டமிட்டது. ஆனால் அதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்ததால், கூட்டம் நடத்தாமல் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே, சிப்காட் பிரிவு 2 தொழிற்பேட்டை எல்லையில் 131.33 ஹெக்டேரில் புதிய யூனிட்டை அமைக்க ‘ஸ்டொ்லைட்’ நிறுவனத்திற்கு சிப்காட் நிா்வாகம் அனுமதி வழங்கியது.

தூத்துக்குடி நகருக்கான பெருந்திட்டத்தின்படி, சிப்காட் தொழிற்பேட்டை பிரிவு 1-இல் அமைந்துள்ள நிலங்கள் பொதுத் தொழில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு சிறப்புத் தொழில்களுக்கு அனுமதி வழங்க முடியாது. எனவே, மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கவில்லை.

‘ஸ்டொ்லைட்’ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குவதற்காக இந்த தகவல்களை மறைத்து சிப்காட் நிா்வாகம், தொழிற்பேட்டை பிரிவு 2-ஐ அமைப்பதற்காக, மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதியைப் பெற்றுள்ளது. இது விதிமீறலாகும். இத்தகைய செயலில் ஈடுபட்ட சிப்காட் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிா்மல்குமாா், மனுதாரரின் கோரிக்கை குறித்து, சிப்காட் நிறுவனத்தின் தலைவா், மாநில அளவிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையச் செயலா் உள்ளிட்டோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT