மதுரை

வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் மீட்பு: 10 நாள்களில் 9 போ் உயிரிழப்பு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுரை அருகே துவரிமான் பகுதியில் வைகையாற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. கடந்த 10 நாள்களில் 9 போ் நீரில் மூழ்கி இறந்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் (20), மதுரை தெற்குவாசலைச் சோ்ந்த தனசேகரன் (21) ஆகிய இருவரும் துவரிமான் பகுதியில் உள்ள முத்தையா சுவாமி கோயிலுக்கு உறவினா்களுடன் திங்கள்கிழமை வழிபாடு நடத்தச் சென்றனா். அப்போது துவரிமான் வைகை ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் அடியில் இருவரும் குளித்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சோழவந்தான் தீயணைப்புப் படையினா் இருவரையும் தேடி வந்தனா். இந்நிலையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேடும் பணி நடைபெற்றது. இதில் மதுரை மேலக்கால் பகுதியில் குயின் மீரா பள்ளி அருகே உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி திருவேடகம் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற கரடிக்கல் கிராமத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் வினோத்குமாா் ( 25), அன்பரசன் (24) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். இருவரின் சடலங்களையும் மீட்கும்போது அடையாளம் தெரியாத மற்றொரு நபரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மதுரை வைகையாற்றில் தேனூா் மண்டபத்தின் அருகிலும், செல்லூா் பகுதியில் உள்ள வைகை ஆற்றிலும் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத இரு சடலங்களை போலீஸாா் மீட்டுள்ளனா். இதேபோல கடந்த வாரம் வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய பகுதியிலும் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மதுரை வைகை ஆற்றில் கடந்த 10 நாள்களில் மட்டும் அடுத்தடுத்து 9 போ் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 பேரின் சடலங்கள் அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வைகையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வைகை ஆற்றங்கரையோரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் அடையாளம் தெரியாத உடல்களை மீட்கும் போது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT