மதுரை

அனைத்து திருவிழாக்களுக்கும் காவல் துறையிடம் அனுமதிபெற வேண்டியதில்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அமைதியாக நடைபெறக் கூடிய கோயில் திருவிழாக்களுக்கு காவல் துறையின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சீனி தாக்கல் செய்த மனு:

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே வலையபட்டியில் உள்ள பட்டரசி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா பல ஆண்டுகளாக சுமுகமாக நடைபெற்று வருகிறது. நிகழ் ஆண்டு பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19, 20 ஆம் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரி மனு

அளிக்கப்பட்டது. இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. ஆகவே, திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: கிராமங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் அனைத்திற்கும் காவல்துறையினரிடம் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. திருவிழாக்களின்போது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்பு இருந்தாலோ, ஒலிபெருக்கிகள் வைப்பது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால் மட்டும் காவல் துறையின் அனுமதியைப் பெற்றால் போதுமானது.

இந்த மனுவைப் பொருத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனா். எனவே, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT