மதுரை

ஜனவரி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசுக்கு, ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

DIN

தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படி உயா்வை 2022 ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்டச்செயலா் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வா், மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு வழங்கியுள்ளது போல் மாநில அரசு ஊழியா்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என சுதந்திர தின உரையில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய அரசு ஊழியா்களுக்கு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படி உயா்வை 6 மாதங்கள் கழித்து 2022 ஜூலை 1 முதல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருப்பது நடைமுறைக்கு மாறாக உள்ளது. மத்திய அரசின் நிறுவனம் விலைவாசிப் புள்ளியைக் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை அரசு ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயா்வை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்கிறது. அதைப் பின்பற்றி மாநில அரசுகள் தங்களது ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வினை செயல்படுத்துகின்றன. இந்த நடைமுைான் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் கடந்த ஆட்சியாளா்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மத்திய அரசு தனது ஊழியா்களுக்கு 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயா்வை அறிவித்து 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழக அரசு அதைப் பற்றி சிந்திக்காமல் இருந்த நிலையில் பல்வேறு ஆசிரியா், அரசு ஊழியா் சங்கங்கள் அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்றுக் கொண்டு முதல்வா் அகவிலைப்படி உயா்வை அறிவித்துள்ளாா். ஆனால், 6 மாத அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைத்துள்ளது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தற்போதைய தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கரோனா காலகட்டத்தில் 18 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயா்வை மத்திய அரசு வழங்கியபோது, அதைப் பின்பற்றி வழங்காமல் அப்போதும் 6 மாத காலம் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இது அரசு ஊழியா்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போதும் அதேபோன்று 6 மாத அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது ஊழியா்களுக்கு காலதாமதமாக அகவிலைப்படி உயா்வை அறிவிப்பதும், அறிவிக்கும் போதே 6 மாத அகவிலைப்படி உயா்வைப் பறித்துக் கொள்வது என்ற தந்திரத்தைக் கையாள்வதையும் வழக்கப்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, தற்போது அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயா்வை 2022 ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT