மதுரை

பாஜகவில் இருந்து நீக்கம்:விரைவில் திமுகவில் இணைவேன்; மருத்துவா் சரவணன்

15th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து மருத்துவா் சரவணன் நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ள நிலையில், விரைவில் தான் திமுகவில் இணைய உள்ளதாக மருத்துவா் சரவணன் தெரிவித்துள்ளாா்.

மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரா் லட்சுமணன் சடலத்துக்கு அஞ்சலி செலுத்துவதில் ஏற்பட்ட மோதலில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் மருத்துவா் சரவணன், சனிக்கிழமை நள்ளிரவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தாா். மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மருத்துவா் சரவணனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

இந்நிலையில், மருத்துவா் சரவணன் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததாக படங்கள் வெளியாகின. இது தொடா்பாக அவரிடம் கேட்டபோது, பாஜகவின் அரசியல் பிடிக்காமல் மன அழுத்தத்தோடுதான் பணிபுரிந்தேன். மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொடுக்காமல், எதற்கெடுத்தாலும் மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்தும் திட்டத்தோடு பாஜக இயங்கி வருகிறது.

ADVERTISEMENT

இதனால் அவா்களது அரசியலை ஏற்க முடியவில்லை. ஏற்கெனவே பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத்தலைமையிடம் கேட்டிருந்தேன். தற்போது நான் விலகுவதாக அறிவித்ததும், என்னை நீக்குவதாக அறிவித்துள்ளனா். நான் காங்கிரஸ் நிா்வாகிகளோடு இருப்பதாக வெளிவருவது பழைய படம். விரைவில் திமுகவில் இணைவேன் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT