மதுரை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

15th Aug 2022 01:03 AM

ADVERTISEMENT

மதுரை மத்தியத் தொகுதிக்குள்பட்ட எல்லீஸ் நகா் மற்றும் அன்சாரி நகா் ஆகிய பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அரசு நலத்திட்ட உதவிகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் மதுரையில் வெள்ளிவீதியாா் பள்ளி, சுந்தரராஜபுரம் மற்றும் தருமை ஆதீனம் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இம்முகாமில், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளான காதொலி கருவி, மூன்று சக்கர ஸ்கூட்டா், செயற்கை கால், மாற்றுத்திறனாளி உதவித்தொகை, அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவி வேண்டி மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து சுமாா் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடா்ந்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், 15 பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று காதொலிக் கருவி, கைபேசி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது, தகுதியான மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT