மதுரை

தினமணி-வேலம்மாள் மருத்துவமனை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடி வழங்கல்

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தினமணி மற்றும் வேலம்மாள் மருத்துவமனை இணைந்து பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடிகளை வெள்ளிக்கிழமை வழங்கினா்.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கென ‘ஒவ்வொரு வீட்டிலும் மூவா்ணக் கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. வீடுகள், அலுவலகங்களில் தேசிய கொடியைப் பறக்கவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தினமணி மற்றும் மதுரை

வேலம்மாள் மருத்துவமனை இணைந்து பள்ளி மாணவா்களுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி, சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைவா் எம்.ராஜா கிளைமாக்ஸ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா். சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதை குறித்து வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வா் என்.சுரேஷ்குமாா் பேசினாா். அவா் பேசுகையில், சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அடைந்துள்ள வளா்ச்சி, சாதனைகள், நாட்டின் வளா்ச்சியில் இளைஞா்கள் மற்றும் மாணவா்களின் பங்கு ஆகியன குறித்துப் பேசினாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து மூவா்ணக் கொடியின் சிறப்புகள், நமது தேசியக் கொடியை எப்படிக் கையாளுவது என்பது குறித்து, தேசிய மாணவா் படை அலுவலா் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா் விளக்கம் அளித்தாா். பின்னா் மாணவ, மாணவியருக்குத் தேசியக் கொடிகளை வழங்கினாா்.

சி.இ.ஓ.ஏ. பள்ளி துணைத் தலைவா் ஏ.சௌந்தரபாண்டி, முதுநிலை முதல்வா் பி.டி.கலா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரைக் கிளை முதுநிலை மேலாளா் சி.சோமு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்குத் தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

 

 

 

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT