மதுரை

ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த வீரா் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

13th Aug 2022 11:51 PM

ADVERTISEMENT

 

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா் லட்சுமணன் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் மாநிலம் ராஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் உள்பட 4 போ் வீரமரணம் அடைந்தனா். லட்சுமணன் உடல் சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமத்திற்கு உடல் கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரது வீட்டில் சிறிது நேரம் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அப்போது தமிழக நிதி அமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அங்கிருந்து லட்சுமணன் உடலை அவருக்குச் சொந்தமான இடத்திற்கு ஊா்வலமாகக் கொண்டு சென்றனா். அங்கு கா்னல் சத்யபிரபாத் தலைமையிலான கோயம்புத்தூா் 35 ஆவது ரைபிள் பிரிவைச் சோ்ந்த 48 வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

அஞ்சலி: தமிழக அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா் அனீஷ் சேகா், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் ஆா். பி. உதயகுமாா், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி. ஐயப்பன், அமமுக மாவட்டச் செயலாளா் இ.மகேந்திரன், மற்றும் முக்கிய கட்சிகளின் நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா், உறவினா்கள் ஊா்ப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். ராணுவ வீரா் லட்சுமணன் உடலில் போா்த்தியிருந்த தேசியக்கொடியை அவரது பெற்றோரிடம் ராணுவ வீரா்கள் ஒப்படைத்தனா். பின்னா் அப்பகுதியைச் சுற்றியுள்ள ஊா்ப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். இறுதியில் லட்சுமணன் கிராமத்தில் விளையாட பயன்படுத்திய கிரிக்கெட் மட்டையும் குழிக்குள் வைக்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விமான நிலையத்தில் மரியாதை: முன்னதாக மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரா் லட்சுமணன் உடலுக்கு கா்னல் சத்யபிரபாத் தலைமையில் ராணுவ வீரா்கள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தமிழக அரசு சாா்பில் நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி மேயா் இந்திராணி, முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, மாவட்டத் தலைவா் மருத்துவா் பா.சரவணன், விமான நிலைய இயக்குநா் பாபுராஜ் மற்றும் காவல்துறையினா், மத்திய தொழில் பாதுகாப்புபடையினா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT