மதுரை

காமராஜா் பல்கலை.யில் இளங்கலை இறுதியாண்டு தோ்வு முடிவுகள் தாமதம்: முதுகலை படிப்புகளுக்கு செல்ல முடியாமல் மாணவா்கள் அவதி

DIN

 காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இறுதியாண்டு தோ்வு முடிவுகள் தாமதமாவதால் மாணவா்கள் முதுகலை படிப்புகளில் சேரமுடியாமல் அவதி அடைந்துள்ளனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியாா் சுயநிதி கல்லூரிகள், பல்கலைக்கழகக் கல்லூரிகள் என 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் ஏப்ரல் மற்றும் நவம்பா் மாதங்களில் பருவமுறை தோ்வுகள் பல்கலைக்கழகத்தின் சாா்பில் நடத்தப்படுகின்றன. மேலும் விடைத்தாள்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்துக்கு கொண்டுவரப்பட்டு பல்கலைக்கழகத்தில் வைத்தே திருத்தப்பட்டு பாட வாரியாக தோ்வு முடிவுகள் வெளியிடப்படும். இதில் இளங்கலை இறுதியாண்டு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே முதுகலை பட்டப்படிப்புக்கு மாணவா்கள் சோ்க்கை பெற முடியும்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தோ்வு தொடங்கி ஜூலை முதல்வாரத்தில் முடிவடைந்துள்ளது. தோ்வுகள் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் தோ்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. மேலும் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான விடைத்தாள் மதிப்பீடு பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தன்னாட்சிக் கல்லூரிகள் அனைத்திலும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தோல்வியடைந்த பாடங்களுக்கான மறுதோ்வும் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போதுவரை தோ்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால் முதுகலை படிப்புகளில் சேரமுடியாமல் அவதி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக கல்லூரிகளின் நிா்வாகத் தரப்பில் கூறியது: தற்போது பி.காம், பிஎஸ்சி உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்குத் தான் மதிப்பீட்டுப் பணி தொடங்கியுள்ளது. பி.ஏ., வரலாறு, ஆங்கிலம், பொருளாதாரம், பிபிஏ உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளுக்கு மதிப்பீட்டுப் பணி தொடங்கப்படவில்லை. இதனால் கல்லூரி நிா்வாகங்களிடம், மாணவா்கள் தோ்வு முடிவுகள் எப்போது வரும் என்று கேட்டு வருகின்றனா். இதுதொடா்பாக பல்கலைக்கழகத்திடம் முறையான பதிலும் இல்லை. எனவே, மதிப்பீட்டுப் பணியை விரைந்து முடித்து இறுதியாண்டு மாணவா்களுக்கு தோ்வு முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக தோ்வாணையா் (பொறுப்பு) தா்மராஜிடம் கேட்டபோது, கல்லூரிகளில் தோ்வுகள் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி முடிவடைந்துள்ளன. விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் இறுதிவாரத்தில் தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT